கரூர்: கரூரில், தி.மு.க., -எம்.எல்.ஏ.,வின் பிளக்ஸ் பேனர் மீது, அ.தி.மு.க., வினர் புதிதாக, பிளக்ஸ் பேனர் கட்டியதை கண்டித்து, தி.மு.க.,வினர் குவிந்தனர்.
கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., வுமான செந்தில் பாலாஜிக்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தி.மு.க.,வினர், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில், சில நாட்களுக்கு முன் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, மாவட்ட பஞ்., துணைத்தலைவரும், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளருமான தானேஷ் முத்துகுமார் சார்பில், அ.தி.மு.க.,வினர், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வாழ்த்தி, தி.மு.க., வினர் வைத்திருந்த பேனர் மீது புதிதாக பேனர் வைத்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் மத்திய கிழக்கு நகர, தி.மு.க., செயலாளர் ராஜா உள்ளிட்ட, தி.மு.க., வினர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் குவிந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அ.தி.மு.க., வினர் பேனர் வைத்தது குறித்து, புகார் கொடுத்தால் விசாரிக்கப்படும் என, தி.மு.க., வினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., வினர் புகார் கொடுக்க, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.