கும்மிடிப்பூண்டி: மாமன் மகளை திருமணம் முடிக்க வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே, பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பென்சிலய்யா மகன் கர்ணன், 30. நேற்று காலை, சிப்காட் பகுதியில், பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் உள்ள டவரில் ஏறினார்.அவர் ஏறியதை கண்ட, பி.எஸ்.என்.எல்., அலுவலக பாதுகாவலர், அருகில் உள்ள சிப்காட் போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மூவர், டவரில் ஏறி, 80 மீட்டர் உயரத்தில் அமர்ந்திருந்த கர்ணனிடம் சமாதானம் பேசினர்.மாமன் மகளை திருமணம் செய்து தராவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, மிரட்டல் விடுத்தார்.மூன்று மணி நேர பேச்சுக்கு பின், கர்ணனை சமாதானம் செய்து, பத்திரமாக இறக்கினர்.