திருத்தணி : கொற்றலை ஆற்று வெள்ளதால் நிரம்பும் பல ஏரிகள், இன்று, பொதுப்பணித் துறை மெத்தனத்தால், ஏரிக்கு தண்ணீர் செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர்,பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தாலுகா, கொற்றலை ஆற்றில் வெள்ளமாக சென்று, பூண்டி ஏரிக்கு சென்றடையும்.இந்த ஆற்றில் வெள்ளம்செல்லும் போது, திருத்தணி அடுத்த, ஆற்காடுகுப்பம் ஏரிக்கு தண்ணீர்செல்ல நீர்வரத்து கால்வாய் உள்ளது.
ஒன்றரை மாதம் முன், திருத்தணி பொதுப்பணி துறையினர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆற்காடுகுப்பம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டது.முறையாக கால்வாய் சீரமைக்காததால், ஒரு வாரமாக கொற்றலை ஆற்றில் வெள்ளம் செல்லும் போதும், நீர்வரத்து கால்வாயின் மூலம், ஆற்காடுகுப்பம் ஏரிக்கு நீர்வரத்து செல்லவில்லை.
இதனால், பனப்பாக்கம் ஏரி, முத்துக்கொண்டாபுரம் ஏரி உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் உள்ளது.மேற்கண்ட ஏரிகளில் தண்ணீர் இருந்தால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடலாம். மேலும், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகும். தற்போது, கொற்றலை ஆற்றில் வெள்ளம் வீணாக செல்கிறது.எனவே, நீர்வரத்து கால்வாய் மீண்டும் சீரமைத்து, ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, ஆற்காடுகுப்பம் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.