விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, பருவமழை தண்ணீரை கடைமடை ஏரிகளுக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, தளவானுார் அணைக்கட்டு ஆகியவை அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 49 கி.மீ., துாரம் செல்லும், தென்பெண்ணை ஆற்றில், மலட்டாறு வாய்க்கால், பம்பை ஆறு, எரளூர் வாய்க்கால், ரெட்டி வாய்க்கால், ஆழங்கால் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால், கண்டம்பாக்கம் வாய்க்கல் உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு ஆற்று தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது. இந்த ஆற்று பாசனத்தை நம்பி, மாவட்டத்தில் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், வாய்க்கால்கள் முட்புதர்கள் மண்டி காடுபோன்று காட்சியளிக்கின்றது. மேலும், வாய்க்காலின் கரைகள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்று தண்ணீர் முழுமையாக ஏரிகளுக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. ஆற்று தண்ணீர் ஏரிகளுக்கு வரும் என்று நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
தற்போது, பருவமழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அப்படி சாத்தனுார் அணையில் தண்ணீர் நிரம்பினால், உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவது வழக்கம்.
இதனால், சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை முழுமையாக ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.