அரூர்: தொடர் மழையால், அரூரிலுள்ள விவசாய கிணறுகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, வாச்சாத்தி, மாலகபாடி, அச்சல்வாடி, மாவேரிப்பட்டி, வடுகப்பட்டி, ஈச்சம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்தது. இதனால், வனப்பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பியதுடன், நீரோடைகளில் வெள்ளநீர் சென்றது. பல ஆண்டுகளுக்கு பின், எருமியாம்பட்டி மற்றும் மாலகபாடி பீணியாறு, சின்னாங்குப்பம் கூட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் சென்றது. தொடர் மழையால், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள், நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏனைய வேளாண் பணிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.