கிருஷ்ணகிரி: அரசு பள்ளியில், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு, மூலிகை தோட்டங்களையும் அமைத்துள்ள ஆசிரியர்களை, கிராம மக்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர், எம்.ஒட்டப்பட்டியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், 94 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்களின் முயற்சியால், பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது, கொரோனா காலத்திலும், இப்பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) வேடியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பழனி, வணசுந்தரி, சரஸ்வதி, வித்யா, அருள்குமார், ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து, தினமும் பள்ளி வந்து, செம்பருத்தி, தூதுவளை, அத்தி, நெல்லி, நாவல், எலுமிச்சை, 100 மூலிகை செடிகளை அமைத்துள்ளனர். அதே போன்று, மாணவர்களுக்கு மதிய உணவுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்க தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். இது குறித்து தலைமை ஆசிரியர் வேடியப்பன் கூறுகையில், ''பள்ளியில் மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகிறோம். அதுபோல் அனைத்து மாணவர்கள் மற்றும் கிராம மக்களும் இது போல், தங்கள் விவசாய தோட்டங்களில், மூலகை தோட்டங்களை அமைக்க வேண்டி, கிராம மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார். தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளியை பராமரித்து வருவதால், ஆசிரியர்களை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.