கொரோனா தொற்று அச்சத்தால் ஆயுத பூஜை விற்பனை 40 சதவீதம் சரிவு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கொரோனா தொற்று அச்சத்தால் ஆயுத பூஜை விற்பனை 40 சதவீதம் சரிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2020
08:59

கிருஷ்ணகிரி: கொரோனா தொற்று அச்சத்தால் சரஸ்வதி, ஆயுத பூஜை விற்பனை, 40 சதவீதம் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று, கிருஷ்ணகிரி நகரில் பூஜை பொருட்கள் விற்பனை நடந்தது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு வாழைத்தாரின் விலை, 250 ரூபாய் முதல், 400 ரூபாய் வரை விற்பனை ஆனது. ரவுண்டானா அருகில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த சாம்பல் பூசணி, ஒரு கிலோ, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வாழைக்கன்று ஒரு ஜோடி, 10 ரூபாய் முதல், வாழை மரம் ஒரு ஜோடி, 200 ரூபாய் வரையும் விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு படி பொரி, 10 ரூபாய்க்கும், சாமந்தி பூ ஒரு மார், 100 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. இதேபோல் தோரணங்கள், கலர் பேப்பர்கள், அலங்கார காகித பூ, பழங்கள், இனிப்பு என வியாபாரம் பரவலாக நடந்தது. இருந்தாலும், இந்த ஆண்டு, கொரோனா தொற்றால், 40 சதவீத விற்பனை பாதிக்கப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று பொருட்களை வாங்க, பொதுமக்கள் குவிந்ததால், சேலம் சாலை மற்றும் பழைய சப் - ஜெயில் சாலையில், சிறிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X