ஓசூர்: தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், இரண்டாவது நாளாக நேற்றும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை பாதுகாப்பு கருதி, 1,040 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,440 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணை மொத்த உயரமான, 44.28 அடியில், 39.36 அடிக்கு நீர் தேங்கியது. இதையடுத்து, 1,440 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு, இரண்டாவது நாளாக நேற்றும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆறு மதகுகள் வழியாக, தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை தேங்கி, துர்நாற்றம் வீசியது.