ஆத்தூர்: பாக்கு விளைச்சல் கணிசமாக இருந்தபோதும், போதிய விலை இல்லாததால், ஆத்தூர், வாழப்பாடி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை, வாழப்பாடி பகுதிகளில், 5,000 ?ஹக்டேருக்கு மேல், 'பாக்கு' பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள மண்வளத்தால், விளைச்சல் அதிகளவில் உள்ளது. இப்பகுதி பாக்குகளை, இரண்டு, மூன்று ஆண்டு வைத்திருந்தாலும் நிறம் மாறாமல், சுவையாக இருப்பதால், தமிழக அளவில் தரம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், ஏக்கர் கணக்கில், பாக்கு மரங்களை, தலா மரம், 200 முதல், 300 ரூபாய் என, குத்தகைக்கு விடுகின்றனர். விளையும் பாக்குகளை அறுவடை செய்து, 'ஆப்பி' எனும் பச்சை (உருண்டை பாக்கு) காய்களாகவும், வேக வைத்தும் பதப்படுத்தப்பட்ட நிலையில் விற்கின்றனர். 2018 - 19ல், பருவமழை பொய்த்ததால், பாக்கு மரத்தில் குறைந்தளவில் பிஞ்சு பிடித்தும், வெயில் தாக்கத்தால் பிஞ்சுகள் உதிர்ந்தும் விளைச்சல் குறைந்தது. நடப்பாண்டு பூ பிடிக்கும் பருவத்தில் கணிசமான மழை பெய்தது. தற்போது, அறுவடை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பாக்கை உரித்து, வேக வைத்து, பதப்படுத்த, போதிய ஆட்கள் கிடைக்காததால், மிஷின்களில் கிலோவுக்கு, ஒன்று முதல், இரண்டு ரூபாய் என, பாக்கு உரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, ஆத்தூர், வாழப்பாடி பகுதி, பாக்கு விவசாயிகள் கூறியதாவது: இங்கு பயிரிடப்படும் பாக்குகள் ஏற்றுமதி தரம் வாய்ந்தவை என்பதால், பொள்ளாச்சி பாக்குகளை விட, கிலோவுக்கு, 10 ரூபாய் கூடுதலாக கொடுக்கின்றனர். மரத்துக்கு தலா ஏழு குலை இருந்தால், 2 கிலோ பாக்கு கிடைக்கும். தற்போது, மரத்துக்கு, 1.5 முதல், 2 கிலோ பாக்கு கிடைக்கிறது. மரத்துக்கு, ஏழு குலைகள் இருந்தால் தலா, 300 ரூபாய் கிடைக்கும். மரத்தில் அறுவடை செய்யும் உரிக்காத முதிர்ந்த பச்சை பாக்கு காய், கிலோ, 35 முதல், 40 ரூபாய்; உரித்த கொட்டை பாக்கு 150 ரூபாய்; வேக வைத்து பதப்படுத்திய பாக்கு, 550 முதல், 600 ரூபாய் என, விலை உள்ளது. கடந்தாண்டில் விளைச்சல் இல்லை; பதப்படுத்திய பாக்கு, 700 முதல், 800 ரூபாய் வரை இருந்தது. தற்போது, கணிசமான விளைச்சல் இருந்தும், போதிய விலை இல்லாதது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.