சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீயணைப்பு வீரர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை, வரும் நவ., 14ல் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்படுவதோடு, பட்டாசுகள் விற்பனைக்கு குவிக்கப்படுகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, தீ விபத்து ஏற்படும் நிலையில், உயிர்சேதம், பொருள் சேதத்தை தடுக்க, தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தமிழகம் முழுதும் செயல்படும், தீயணைப்பு நிலையங்கள், 322ல் பணிபுரியும், 5,955 பேர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே விடுப்பில் சென்றவர்களும், உடனே பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு பணிக்கு பயன்படுத்தப்படும், 2,250 வாகனங்கள், தீயணைப்பு கருவிகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தீயணைப்பு நிலையங்களில், வாகனங்கள், கருவிகள் பராமரிப்பு பணி நடக்கிறது.
தன்னார்வலர்: கொரோனா பரவலை தடுக்க, வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை பேரிடர், தீபாவளியின்போது, விபத்து பணியை மேற்கொள்வது குறித்து, மாவட்டந்தோறும் செயல்படும் தன்னார்வ அமைப்புகளுடன், தீயணைப்பு இயக்குனர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதில், பண்டிகை, மழைக்காலங்களில், தன்னார்வ அமைப்புகள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பணிபுரிய ஆலோசனை வழங்கப்பட்டது.