ஊரடங்கால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு: வங்கிகளில் பெற்ற கடனால் மேலும் நிதி நெருக்கடி அதிகரிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
ஊரடங்கால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு: வங்கிகளில் பெற்ற கடனால் மேலும் நிதி நெருக்கடி அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2020
09:51

சேலம்: ஊரடங்கில், அரசு பஸ்களின் வருவாயில், 4,545 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ள நிலையில், தொழிலாளருக்கு சம்பளம் வழங்க, போக்குவரத்துக்கழகங்கள், மேலும் கடன் பெற்றுள்ளதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.


கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் இறுதி முதல் ஊரடங்கு அமலானதால், அரசு போக்குவரத்துக்கழகங்களில், 22 ஆயிரத்து, 542 பஸ்களின் இயக்கம் முடங்கியது. அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், போக்குவரத்துக்கழக புள்ளி விபரப்படி, பயணியர் டிக்கெட் கட்டண வசூல் மூலம், 24.19 கோடி ரூபாய், இதர வருவாய் மூலம், 4.91 கோடி ரூபாய் என, தினமும் சராசரியாக, 29.10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தொடர்ச்சியாக, 160 நாள் பஸ்கள் இயக்கப்படாததால், 4,656 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. செப்., 1 முதல், பஸ்கள் இயக்கத்துக்கு வந்த நிலையில், முதல் இரு வாரங்கள், 30 முதல், 40 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. தொழிற்சங்க போர்க் கொடியால், தற்போது, 60 முதல், 70 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணியர் எண்ணிக்கை சரிந்து வருவதால், அதற்கேற்ப, வருவாயும் குறைந்து காணப்படுகிறது. செப்., 1ல் தொடங்கி, அக்., 24 வரையில், 1,571 கோடி ரூபாய் வர வேண்டிய நிலையில், 500 கோடி ரூபாய் மட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம், ஊரடங்கில் போக்குவரத்துக்கழக இழப்பு, 5,727 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதே நேரம், எரிபொருள், சுங்க கட்டணம், தேய்மானம் வகையில், போக்குவரத்துக்கழகங்களுக்கு, 1,182 கோடி ரூபாய் வரை செலவினம் மிச்சமாகி உள்ளதால், ஊரடங்குகால இழப்பு என்பது, 4,545 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழகங்களுக்கு ஏற்கனவே, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ள நிலையில், தற்போது தொழிலாளருக்கு சம்பளம் வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெறப்பட்டுள்ளது. பணிமனை, அலுவலகங்கள் பெயரில், வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளதால், நிதி நெருக்கடியால், போக்குவரத்துக்கழகம், கடனில் சிக்கி தவிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்தால் மட்டுமே, கடனில் இருந்து மீள முடியும்.


'பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால்தான் தீர்வு': தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யூ., மாநில துணைத்தலைவர் அன்பழகன் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து துறையில், லாப நஷ்ட கணக்கு பார்ப்பது இயலாது. பஸ்களின் இயக்கத்தில் வருவாய், செலவு இடையிலான இழப்பு தொகையை, ஆண்டுதோறும் மாநில அரசு, பட்ஜெட்டில் ஒதுக்கினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஆண்டுதோறும் புது பஸ்களை வழங்குவதாக தெரிவிக்கும் அரசு, அதற்கான எரிபொருள் கட்டண உயர்வை வழங்குவதில்லை. அத்துடன், அரசு சார்பில், மக்களுக்கு வழங்கப்படும் இலவசம், சலுகை பாஸ்களுக்கான மானியத்தொகையும் வழங்குவதில்லை. போக்குவரத்துக்கழகங்களை, சேவை துறையாக மட்டுமின்றி, வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X