மேட்டூர்: பாரம்பரிய நெல், காய்கறி விளைச்சலை அதிகரிக்க, தொடர்ந்து மூன்று ஆண்டு, இயற்கை முறையில் சாகுபடி செய்வோருக்கு, இயற்கை விவசாயிகள் அங்கீகார சான்றிதழ் வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், பாரம்பரிய நெல், காய்கறி விளைச்சலை அதிகரிக்க, மத்திய அரசு புது திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மத்திய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், இயற்கை சாகுபடியை ஊக்குவிக்க, வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக, கொளத்தூர் வட்டாரத்தில், காவேரிபுரம், கண்ணாமூச்சி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலா ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள், ஊராட்சிக்கு, 50 பேர் வீதம், 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. இதில், இரு ஊராட்சிகளில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய, தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, குடவாலை, கள்ளிமடையான் உள்ளிட்ட நெல் விதைகளை வழங்கியுள்ளோம். இந்த ரகங்கள் முழு வளர்ச்சியடைய, 140 முதல், 150 நாளாகும். இப்படி ஓராண்டில், நெல், காய்கறி, பயிறு வகைகளை, இயற்கை முறையில் சாகுபடி செய்வோருக்கு, அரசு, மானியமாக, 9,000 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதில், உரம், நவதானியங்கள் உள்ளிட்ட சாகுபடிக்கு, பொருட்கள் வழங்கியது போக, மீதி தொகை, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தொடர்ந்து, இரு ஆண்டுகள், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அரசு சார்பில், நம்பிக்கை சான்றிதழ் வழங்கப்படும். மூன்று ஆண்டுகள், தொடர்ந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயி அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்த உணவு பொருட்கள் என எளிதாக சந்தைப்படுத்த முடியும். கொளத்தூர் வட்டாரத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள, 100 விவசாயிகள் தவிர, மேலும், 74 விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி, பாரம்பரிய நெல், தானிய வகைகள் சாகுபடி செய்கின்றனர். அவர்களுக்கும், அங்கீகாரம் கிடைக்க, கொளத்தூர் வேளாண் உதவி இயக்குனர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.