வரும் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், சசிகலா வரும் முன், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்ட முதல்வர் பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். அதற்கேற்ப தன் சுற்றுப்பயணத்தின் போது, முக்கிய நபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
ஜெயலலிதா இருந்த வரை, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல் என்றாலே, கூட்டணி கட்சிகள், தொகுதியுடன் முதல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் சுற்றுப்பயணம், தேர்தல் அறிக்கை என அனைத்தையும் முதலில் வெளியிட்டு, அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார். கடந்த, 2001ல் ஜெ., தனியாகவும், சசிகலா ஆலோசனையுடனும், வேட்பாளர் பட்டியல் தயாரித்தார். 2004 பார்லிமென்ட் தேர்தல் முதல், 2016 சட்டசபை தேர்தல் வரை, முக்கிய நபர்களின் பெயர்களை ஜெயலலிதா, 'டிக்' செய்தாலும், பெரும்பாலான பெயர்களை சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், பூங்குன்றன் என்ற வகையறாக்களே, பலன் பெற்று நிர்ணயித்தனர். இதனால், சீட் பெற விரும்புவோர், இவர்களில் யாரையாவது பிடித்து, பட்டியலில் இடம் பெற்றனர். பணம் போய், சீட் கிடைக்காவிட்டாலும், அடுத்த தேர்தலில் அல்லது வேறு பதவிகளை தக்க வைத்தனர். கடந்த, 2016ல் ஜெ.,க்கு தெரியாமலே, சசிகலாவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. அந்த பட்டியலையும், தொகுதியும் மாற்றி, இரண்டாவதாக ஜெ., அறிவிப்பு செய்ததை நினைவு கொள்ளலாம்.
ஜெ., மறைவு, சசிகலா சிறைவாசம் என்றாகி, 2019 பார்லிமென்ட் தேர்தலில், இவர்கள் இருவர் மட்டுமின்றி, சசி வகையறாக்கள் யாரும் இன்றி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் குறிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்பால் பட்டியல் தயாராகி, தேனி தவிர, 39 தொகுதியையும், அ.தி.மு.க., இழந்தது. அத்தோல்விக்கு பல காரணம் இருந்தாலும், சீட்டு பெற பலரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், தகுதி இருந்தும் சீட் கிடைக்காமல் போனவர்கள், உள் குத்தை சமாளிக்க முடியாதது, கட்சி கொடுத்த பணம் கடைசி வரை போய் சேராதது, பணத்தை பெற்ற மாவட்ட செயலாளர் அல்லது அமைச்சர், தேர்தல் பணிக்கு செலவிடாமல் பதுக்கியது போன்றவையும் காரணமானது. ஜெ., இருந்திருந்தால், 'ஆட்சியை கையில் வைத்து கொண்டு வெற்றி பெற முடியாத உங்களுக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவி எதற்கு' எனக்கூறி, 15 அமைச்சர்களுக்கு மேல், 20 மாவட்ட செயலாளர்களுக்கு மேல் மாற்றி இருப்பார். ஆனால், பார்லிமென்ட் தேர்தலில் தோல்வி அடைந்த பல வேட்பாளர்கள், முதல்வர் பழனிசாமியிடம், மிகப்பெரிய புகார் பட்டியல் கொடுத்தும், ஒருவர் மீது கூட நடவடிக்கை பாயவில்லை. இச்சூழலில், ஜெ.,யும், சசியும் இல்லாமல், 2021 சட்டசபை தேர்தலின் முதல்வர் வேட்பாளர் மட்டும் அவசர, அவசரமாக அறிவித்தனர். தன் நம்பிக்கை வட்டாரம் மூலம், ஒரு தொகுதிக்கு மூவர் வீதம் பட்டியல் தயாரித்து, தன்னிடம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி, மூத்த அமைச்சர் கூறியதாவது: சிறையில் இருந்து சசிகலா, வரும் டிச., இறுதி அல்லது ஜன., முதல் வாரம் வெளியே வரும் முன், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணியை துவங்க வேண்டும், என முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதை அறிந்து, சிட்டிங் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் என பிற கட்சியில் இருந்து வந்தவர்கள் என பலரும் பணத்துடன் யாரை சந்திப்பது என குழப்பத்தில் தவிக்கின்றனர். ஜெ., ஆட்சியில் இருந்த ஐவர் குழுவான ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி ஆகியோரும், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் வழிகாட்டு குழுவினரான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட, 11 பேரையும் நம்புவதா என அல்லாடுகின்றனர். இதற்கிடையில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தன் மாவட்டத்துக்குள், தன் ஆதரவாளர்களாக, தனக்கு அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைக்க உதவுபவர்களாக இருக்க வேண்டும் என பட்டியல் தயாரித்துள்ளனர். அதேநேரம், தனக்கும், பிற தொகுதிக்கும் தேர்தல் செலவை ஏற்கும் வகையில், பணமுள்ள நபர்களாக இருப்பதையும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த மூன்று மாதமாக முதல்வர் பழனிசாமி, சுற்றுப்பயணம் செல்லும் மாவட்டங்களில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 'வேட்பாளர்' பட்டியலில் உள்ள நபர்கள், தகுதியான நபர்கள்,உள்ளூர் பிரச்னை, ஒருவருக்கு மேல் தகுதியான நபர்கள் விபரங்களையும் விசாரித்து, குறைந்த பட்ச பட்டியலை தயார் செய்கிறார். அதிலும், அ.தி.மு.க.,வின் சிட்டிங் எம்.எல்.ஏ., தொகுதியை மட்டும் தக்க வைத்தாலே, முதல்வர் சீட் உறுதி என கணக்கிட்டு, அவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார். அதனால்தான், தென் மாவட்டத்தை தவிர்த்து, கடந்த முறை, அ.தி.மு.க., அதிக இடம் பிடித்த பகுதியில் முதல்வர் வலம் வருகிறார். இதனால், தீபாவளிக்குப்பின் அல்லது நவ., மாதம், 'தேர்தலில் போட்டியிட விரும்புவோர், குறிப்பிட்ட குழுவை அல்லது நபர்களை அணுகி, தங்களது தகுதி விபரத்தை வழங்க' அறிவிப்பு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் நிகழ்ந்த உள்குத்து, குறைந்த ஓட்டில் தோல்வி, அந்தந்த மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பின்றி செயல்படுவதை தடுக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.