நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, லாரி வாங்கி, தவணை செலுத்தாமல் ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,47. இவர், 2017ம் ஆண்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், ரூ. 3 லட்சம் கடன் பெற்றும், தனது பணம் ரூ.2 லட்சம் செலுத்தியும் லாரி வாங்கினார்.லாரி வாங்கிய ஆறு மாதத்திலேயே அதை இயக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், கடனுக்கான தவணை தொகையையும் கட்டாமல் இருந்தார்.இதையறிந்த, பண்ருட்டி, சாலை நகரை சேர்ந்த குமார், 50, என்பவர், லாரியை தான் எடுத்து இயக்குவதாகவும், தனியார் நிறுவனத்துக்கு தவணையை செலுத்துவதோடு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாக ஆறுமுகத்திடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆறுமுகம், லாரியை குமாரிடம் ஒப்படைத்தார். ஆனால், குமார் தனியார் நிறுவனத்துக்கு தவணை செலுத்தாததோடு, லாரிக்கு போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்ய முயன்றுள்ளார்.இது குறித்து, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிந்து, குமாரை நேற்று முன்தினம் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.