சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்களை தோண்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதை மூடுவதில் அலட்சியம் காட்டுவதால் அப்பாவி மக்கள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.
கிராமப்பகுதிகளை விட நகராட்சிப்பகுதிகளில் தான் ரோடு, தெருக்கள் அதிகளவில் தோண்டப்படுகிறது. தொலைபேசித் துறை, குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல், பாதாள சாக்கடை குழாய் பதிப்பு , இணைப்பு கொடுத்தல் என அடுத்தடுத்து ரோடு, தெருக்களில் பள்ளம் தோண்டப்படுகிறது. இதற்கான வேலை முடிந்த போதும் வெட்டிய பள்ளத்தை உடனடியாக மூடுவது கிடையாது .
மாதங்கள் பல கடந்தாலும் அதிகாரிகள் எட்டி கூட பார்ப்பதில்லை. தெருக்கள், ரோட்டின் ஒரங்களில் வாய் பிளந்த படி இருக்கும் பள்ளத்தில் அப்பாவி மக்கள், இருசக்கர வாகன ஒட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகன்றனர். பல நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. அதிகாரிகளின் அலட்சியத்தால் விலை மதிக்கமுடியாத உயிர்கள் பலியாகும் அவலமும் தொடர்கிறது. தொலை தொடர்புத் துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் ரோடுகளின் ஒரத்தில் பள்ளம் தோண்டி கேபிள், குடிநீர் குழாய் பதித்த பின் முறையாக மூடாததால் நான்கு சக்கர கவாகனங்களின் டயர்கள் புதைகிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
.தாமத பணியால் விபத்து
நகராட்சி பகுதிகளில் ரோடு தெருக்களில் குடிநீர் குழாய் , பாதாள சாக்கடை இணைப்பிற்காக மக்கள் பள்ளம் தோண்டும் போது சேதமாகும் ரோடு, தெருக்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் பணம் வசூல் செய்கிறது. இதை மூடுவதில் கூட எந்த அக்கறையும் கொள்வதில்லை . இதன் பள்ளத்தில் சிறுவர்கள், முதியவர்கள் , இரவு நேரத்தில் புதிதாக வருபவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். பாதாள சாக்கடை மேன் ஹோலை திறந்து போடுவதால் வாகனங்களும் விபத்திற்குள்ளாகி உயிர் பலி யாகும் நிலை உள்ளது. இத்ன மீது அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கரேஸ்வரன், வியாபாரி. சாத்துார்..............