சின்னமனுார் : சின்னமனுாரில் மகன் சுருளி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மனம்நொந்து ஆற்றில் குதிக்கப்போன மூதாட்டி முத்துலட்சுமிக்கு 60, போலீசார் நிதி உதவி செய்தனர்.
சின்னமனுார் சங்கடி தெரு நாகராஜ் மனைவி முத்துலட்சுமி. கணவர் இறந்தபின் மகன் சுருளியுடன் வசிக்கிறார். ஓட்டலில் சர்வராக உள்ள அவர் தாயிடம் தினமும் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி அக். 23 ல் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். அங்கு குளித்தவர்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சுருளிக்கு அறிவுரை கூறி அவருடன் தாயை அனுப்பி வைத்தார்.
அந்த மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி சின்னமனுார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் ஜெய்கணேஷ், முத்துச்செல்வன் ஆகியோர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று ரூ. 7 ஆயிரம் வழங்கினர். பெட்டிக்கடை வைத்துக் கொள்ளவும், அதற்கான இடத்தை தேர்வுசெய்து தருவதாகவும் கூறினர். போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.