வேப்பூர்; வேப்பூர் அரசு மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2016ல் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. கடந்தாண்டு 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவும் துவங்கப்பட்டது. ஆனால் விபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சையளிக்க உபகரணங்கள், மருத்துவ வசதிகள் இங்கு இல்லை. இங்கு 60 படுக்கைகளுடன் கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்ட நிலையில், 30 படுக்கைகள் மட்டுமே உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் பலரும் பிற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிகின்றனர்.சமையலறை வசதி இல்லாததால், உள் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற ஓட்டல் உணவு வழங்கப்படுகிறது. பிணவறை வசதி இல்லாததால், விருத்தாசலம், பெரம்பலுார், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு சடலங்களை கொண்டு செல்வதால், இறந்தவர்களின் உறவினர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டடம், படுக்கைகள், நவீன சமையலறை மற்றும் பிணவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.