தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு மந்தம்: வருவாயில் வீழ்ச்சி ஏற்படும் என தகவல் | சேலம் செய்திகள் | Dinamalar
தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு மந்தம்: வருவாயில் வீழ்ச்சி ஏற்படும் என தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2020
09:49

சேலம்: 'கொரோனாவால், தீபாவளி சிறப்பு பஸ்களின் முன்பதிவில், மந்த நிலை காணப்படுவதால், வருவாயில் வீழ்ச்சி ஏற்படும்' என, அதிகாரிகள் கூறினர்.


கடந்த, 2019 தீபாவளி பண்டிகையன்று, சென்னையில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, எட்டு லட்சமாகவும், தொழில் நகர பயணிகளின் எண்ணிக்கை, 10 லட்சமாகவும் இருந்தது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எஸ்.இ.டி.சி., பஸ்களின் முன்பதிவு துவங்கி, 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில், கொரோனா காரணமாக நவ.,12, 13 ஆகிய நாட்களில் முன்பதிவு என்பது, 40 சதவீதமாக உள்ளது. பிற போக்குவரத்து கழகங்களின் சார்பில், இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு துவக்கப்படவில்லை. கடந்தாண்டு தீபாவளிக்கு, சிறப்பு பஸ்களின் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு, 98 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில், தீபாவளிக்கான முன்பதிவில் மந்த நிலை காணப்படுவதால், சிறப்பு பஸ்களின் வருவாயில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொரோனாவால், தற்போது இயக்கத்தில் உள்ள பஸ்களிலேயே பயணிகளின் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் வருவாயும், நடப்பாண்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, வழக்கமாக இயக்கப்படும் எஸ்.இ.டி.சி., உள்ளிட்ட முன்பதிவு வசதி கொண்ட பஸ்களுக்கான, தீபாவளியை ஒட்டிய முன்பதிவு மந்த நிலையிலேயே உள்ளது. கடந்த ஆண்டை போல், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கொரோனாவால் வருவாயில் சரிவே ஏற்படும். ரயில்கள், ஆம்னி பஸ்களின் இயக்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால், கடைசி நேரத்தில் அரசு பஸ்களின் இயக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X