சேலம்: சேலத்தில், காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டு, வேறொரு பெண்ணை மணந்த வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், வின்சென்டை சேர்ந்தவர் இந்து, 29. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும், செட்டிச்சாவடியை சேர்ந்த கலைசெல்வன், 30, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கலைசெல்வனிடம், இந்து கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக கலைசெல்வன் தன் மொபைல் போன் எண்ணை மாற்றி விட்டார். இதனால், அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் இந்து தவித்து வந்தார். இந்நிலையில், வேறொரு பெண்ணுடன் கலைச்செல்வனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக, இந்துவுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து, அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் பெற்றோருடன் சென்று, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு இந்து புகாரளித்தார். இதையடுத்து, இந்து, கலைசெல்வனிடம் இன்ஸ்பெக்டர் சிவகாமி நள்ளிரவு, 1:30 மணி வரை விசாரணை நடத்தினார். இந்நிலையில், போலீசாரின் அறிவுரையை மீறி, நேற்று காலை, கலைசெல்வன், கருப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.