மதுரை: மதுரை மாவட்டத்தில் தினமும் சராசரியாக பதிவாகும் கொரோனா பாதிப்பு 71 ஆக சரிந்தது. குணமடைவோர் விகிதம் 94.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு துவங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாதிப்பு தென்பட்டது. ஜூனில் வேகமாக உயர்ந்தது. ஜூலையில் முழு உச்சத்தை தொட்டது. தினசரி 250க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 460ஐ தொட்டது. ஆக., முதல் பாதிப்பு படிப்படியாக சரியத் துவங்கியது. தற்போது கணிசமாக குறைந்துவிட்டது.
தினசரி பாதிப்பு 50 முதல் 100 வரை பதிவாகிறது. ஒருவர் வீதம் இறக்கின்றனர். ஜூலையில் சராசரி பாதிப்பு 280 வரை இருந்தது. பின்னர் ஆக.,ல் 99, செப்.,ல் 81, அக்.,ல் 71 என வேகமாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு 18,564, பலி 417 ஆகும். 17,550 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருந்தனர். அதாவது, 94.55 சதவீதம் பேர் குணமடைந்து விட்டனர். இறப்பு விகிதம் 2.24 சதவீதமாகும்.
மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் தினசரி பதிவாகும் சராசரி கொரோனா பாதிப்பு 71 ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். பண்டிகை காலத்தில் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். மாஸ்க், சமூகஇடைவெளி, கை சுத்தம் பேணுவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.