விருதுநகர் : மாவட்டத்தில் நான்கு வழிச்சாலையோரம் சேதமான தடுப்புகளை அகற்றாமல் விடப்பட்டுள்ளது. விபத்துக்கு வழிவகுக்கும் இவற்றால் வாகன ஒட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) பராமரப்பில் உள்ள நான்கு வழிச்சாலையோரம் உள்ள வளைவுகள், இணைப்பு சாலைகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிடும் போது இரும்பு தடுப்புகள் மீது வாகனங்கள் மோதி சேதமடைகிறது.
அவற்றிற்கு பதிலாக புதிதாக இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட வேண்டும். இச்செலவுகளை விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையை என்.எச்.ஏ.ஐ., பின்பற்றுவதில்லை. பல இடங்களில் இரும்பு தடுப்புகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றால் நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்
நோக்கமே சிதைப்பு
நான்கு வழிச்சாலையோரம் வளைவுகள், இணைப்பு சாலைகளில் திரும்பும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தடுக்கவே இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை விபத்தால் சேதமடையும் போது உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதிய தடுப்புகள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யாததால் நோக்கமே சிதைக்கப்பட்டு வருகிறது. காலதாமதம் இன்றி புதிய தடுப்புக்களை அமைக்க வேண்டும்.- முருகவேல், சமூக ஆர்வலர், விருதுநகர்.