கரூர்: வாங்கல் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். கரூர், வாங்கல் சாலையில், நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குப்பை சேகரித்து, வாங்கல் சாலையிலுள்ள கிடங்கிற்கு நகராட்சி லாரிகள் மூலம், குப்பை கொண்டு செல்லப்படுகிறது. இதில், தனியார் நிறுவனங்களிலிருந்து, அனுமதியில்லாமல் அரசு காலனி பகுதி சாலையில் குப்பை கொட்டி செல்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசியும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றாமல் நகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால், கரூரிலிருந்து வாங்கல் செல்லும் சாலையில் புகை மண்டலமாக மாறி, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, முறைப்படி, குப்பையை எடுத்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.