கோவை : ''ராணுவ தளவாடங்கள், பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்,'' என, ராணுவ துறை செயலர் அஜய் குமார் பேசினார்.
கோவை, 'கொடிசியா டிபன்ஸ் இன்னவேஷன் சென்டர் அண்ட் அடல் இன்குபேஷன் சென்டர்' துவக்க விழா நேற்று நடந்தது. இதன் இயக்குனர் சுந்தரம் தலைமை வகித்தார். கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார்.காணொலியில் இந்த மையத்தை துவக்கி வைத்து, ராணுவ துறை செயலர் அஜய் குமார் பேசியதாவது:
தென்மாநிலங்களுக்கே வழிகாட்டுதலாக கோவையில் ராணுவ தயாரிப்புகளுக்கான பொது வசதி மையம், அடல் இன்குபேஷன் சென்டர் அமைவது பொருத்தமான ஒன்றாக உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த கோவையின் வளர்ச்சிக்கு இது மேலும் உத்வேகத்தை அளிக்கும். வெளிநாடுகளிலிருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதியை குறைப்பது மட்டுமின்றி, ஏற்றுமதியை உயர்த்த வேண்டும் என்ற முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம். ராணுவ தளவாடங்கள், பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், விமான படை கமாண்டிங் ஏர் ஆபீசர் ஸ்ரீகுமார், கடற்படை பழுதுநீக்கும் தளத்தின் அட்மிரல் தீபக் ஆகியோருடன், கொடிசியா இன்குபேஷன் சென்டர் இயக்குனர் சுந்தரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொண்டார்.