பேரூர்:'மேடை அலங்காரம், பூங்கொத்துகளுக்கு பயன் படும் அஸ்பராகஸ், கோல்டன் ராடு செடிகள், கை நிறைய லாபம் அள்ளித் தருகின்றன' என்கின்றனர், அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள்.தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. உள்ளூர் காய்கறிகள் மட்டுமின்றி, மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகளும் சாகுபடியாகிறது.ஒரு சில விவசாயிகள், மேடை அலங்காரம், பூங்கொத்துகளுக்கு பயன்படும் அஸ்பராகஸ் மற்றும் கோல்டன் ராடு செடி உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர். நரசீபுரம், மாதம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதி விவசாயிகள், பெங்களூரில் இருந்து நாற்று வாங்கி வந்து சாகுபடி செய்கின்றனர்.மாதம்பட்டி விவசாயி ராதா, ''அஸ்பராகஸ் செடிக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு. பெங்களூரில் ஒரு நாற்று, 20 ரூபாய்க்கு விற்கின்றனர். ஏக்கருக்கு, 10 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம்.''முறையாக பராமரித்தால், ஓராண்டு பயன் தரும். சுப முகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் மட்டுமே விற்பனை இருக்கும். தற்போது, ஒரு கட்டு செடி, 35 ரூபாய்க்கு விற்கிறது.''ஒரு ஏக்கரில் கோல்டன் ராடு சாகுபடி செய்ய, 25 ஆயிரம் நாற்றுகள் தேவை. நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து பூ பூக்கும். இந்த இரண்டு செடிகள் வாயிலாக ஆண்டுக்கு, ஒரு லட்சம் வரை லாபம் ஈட்டலாம்,''என்றார்.