தேனி : தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பெயரில் போலி முகநுால் ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பாண்டிச்செல்வம். இவர், தனது பெயரில் முகநுால் பயன்படுத்தி வருகிறார். இவரை வெளி மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது பெயரில் பாலோயராக பின் தொடர்ந்து, டி.எஸ்.பி., உறவினர்களிடம் ரூ.30 ஆயிரம் பண உதவி கேட்டுள்ளார்.மேலும், டி.எஸ்.பி.,யின் உறவினர் ஒருவரை 'சார்' என குறுஞ்செய்தி அனுப்பியதால், சந்தேகமடைந்த உறவினர் டி.எஸ்.பி., பாண்டிச்செல்வத்திடம் இது குறித்து விசாரித்தார்.
தான் யாரிடமும் பணம் கேட்க வில்லை எனக்கூறினார்.இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த போலியான முகநுால் முகவரியை டி.எஸ்.பி., நீக்கம் செய்தார். மேலும் போலியான முகவரி கொண்டு பண மோசடியில் ஈடுபட முயற்சித்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.முகநுால், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உதவி கேட்கும் நபர்களை பல முறை பொது மக்கள் உறுதி செய்து உதவிட வேண்டும். மேலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என டி.எஸ்.பி., தெரிவித்தார்.