திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில், மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து, 1300 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் சட்ட விரோதமாகவும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகமாகும். எனவே, சிறப்பு சோதனையில் ஈடுபட போலீசாருக்கு எஸ்.பி.ரவளிப்பிரியா உத்தரவிட்டார்.
மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த ஸ்டேஷன் பகுதியில் உள்ளவர்கள் சந்தேக இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை முதல் நடந்த சோதனையில் 120 வழக்குகள் பதியப்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 1300 மது பாட்டில்களும், சட்ட விரோத விற்பனைக்கு பயன்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இது போன்று அவ்வப்போது திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என எஸ்.பி., அலுவலக போலீசார் தெரிவித்தனர்.