பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பழங்குடியின இளைஞர்கள், 'நாசிக் டோல்' இசைத்து அசத்துகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைவாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக, பொள்ளாச்சி தம்பம்பதி பழங்குடியின இளைஞர்கள், 'நாசிக் டோல்' இசைத்து அசத்துகின்றனர்.தம்பம்பதி பழங்குடியின குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள இளைஞர்கள், 'நாசிக் டோல்' கலையை கற்றுக்கொண்டு, அழகாக டிரம்ஸ் இசைத்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.பொள்ளாச்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தங்களது இசையால் பொதுமக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தனர்.இசைக்குழுவை சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:கோவில் திருவிழாவின் போது, வெளியூரில் வந்த குழுவினர் வாசிப்பதை கண்டு எங்களுக்கும் இசைக்கருவிகளை இசைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தனியாக சென்று கற்றுக்கொள்ள வசதி இல்லாத சூழலில், 'யுடியூப்' வீடியோ பார்த்து, 'நாசிக் டோல்' இசைப்பதை கற்றுக்கொண்டோம். தன்னார்வலர்கள், உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் இசைக்கருவிகளை வாங்கி இசைக்க துவங்கினோம். அதிக எடையில் உள்ளதால் அவற்றை துாக்கி இசைக்க சிரமம் இருந்தது. தற்போது, எளிதாகி விட்டது.'ஹில்ஸ் ஸ்டார் நாசிக் டோல்' குழு என பெயரிட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திண்டுக்கல், கரூர், தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம். மொத்தம், 26 பேர் குழுவில் உள்ளனர். துக்க நிகழ்ச்சி தவிர மற்ற அனைத்து விழாக்களுக்கும் சென்று வாசிக்கிறோம். விழாக்கள் இல்லாத நாட்களில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, கட்டணம் வசூலிக்காமல் 'டியூசன்' எடுப்பது; வேலைக்கு செல்வது என அன்றாட பணிகளை கவனிப்போம்.பழங்குடியின இளைஞர்கள் இணைந்து, குழுவாக இசைக்கருவிகளை வாசித்து வெளி உலகில் திறமை காட்டி வருவதை பலரும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.