சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 1.05 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் உள்பட, நான்கு பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு, புரோக்கர்கள் மூலம், சேலம், கந்தம்பட்டியில் உள்ள, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 'இனாம்' வசூலில் ஈடுபடுவதாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு அந்த அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர். நேற்று காலை, 3:00 மணி வரை நடந்த சோதனையில், ஆவணங்கள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத பணம், ஒரு லட்சத்து, 5,300 ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, அலுவலக கண்காணிப்பாளர் சரவணன், புரோக்கர்கள் அஜய், தனசேகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
* நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான, 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். ஆணையாளர் இளவரசன், 50, பொறியாளர் சரவணன், 48, பணியாளர்களிடம் இருந்த மொபைல்போனை வாங்கி, அணைத்தனர். முதற்கட்டமாக, அவர்களிடம் பணம் உள்ளதா என சோதனை செய்தனர். சிலரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை தனி அறையில் அமர வைத்தனர். அடுத்ததாக, வருவாய், பொது, பொறியியல், நகர அமைப்பு, பொது சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். முக்கியமாக கட்டட அனுமதி, குடிநீர் இணைப்பு, புதிய வீட்டு வரி ரசீது போன்ற ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு, நேற்று மதியம் நிறைவு பெற்றது. சோதனையில், கணக்கில் வராத, 55 ஆயிரத்து, 420 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. ஆய்வின் போது, வெளி ஆட்கள் அலுவலகத்தில் அனுமதிக்கப்படவில்லை.
- நமது நிருபர் குழு -