சேலம்: லாரிகளுக்கு, மூன்று காலாண்டு வரி செலுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதால், கொரோனா காலத்தில், நிதி நெருக்கடியில் சிக்கிய உரிமையாளர்கள், போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது: கடந்த செப்., 30ல், இரு காலாண்டு வரி(மார்ச், 1 - மே, 30; ஜூன், 1 - ஆக., 31) செலுத்தும் காலங்கள் முடிந்த நிலையில், மூன்று லட்சம் லாரிகள் வரி செலுத்தவில்லை. அதேநேரம், ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதை, கடந்த ஜூலை, 28 முதல் போக்குவரத்துத்துறை முடக்கியது. தற்போது, போக்குவரத்து துறை, ஆன்லைன் சேவையை தொடங்கி, அக்., 31க்குள் வரி செலுத்த உத்தரவிட்டது. ஆனால், இரு காலாண்டு மட்டுமின்றி, வரும் டிச., 31 வரையான, நடப்பு காலாண்டு வரியையும் செலுத்த வேண்டும் என்ற நிலையை, ஆன்லைனில் உருவாக்கி உள்ளது. நடப்பு காலாண்டுக்கு, நவ., 14 வரை அவகாசம் உள்ள நிலையில், லாரி உரிமையாளர்களை பழிவாங்க, குறுகிய கால அவகாசத்தில் வரி செலுத்த, போக்குவரத்து அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். அக்., 31க்குள், மூன்று காலாண்டு வரியையும் செலுத்தாதபட்சத்தில், 100 சதவீத அபராதத்தொகை என்பது, தற்போது செலுத்த வேண்டிய காலாண்டு வரித்தொகையை இரட்டிப்புடன் செலுத்த நேரிடும். ஒரே நேரத்தில் அனைத்து லாரிகளுக்கும் வரி செலுத்துவது இயலாது. அதனால், தமிழக அரசு, லாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். அத்துடன், கொரோனாவால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லாரி உரிமையாளர்கள், தொழிலை தொடர, மூன்று காலாண்டு வரியை, பல்வேறு கால கட்டங்களில் செலுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டும். இல்லையெனில், விரைவில் பொதுக்குழுவை கூட்டி, போராடுவதை தவிர வேறு வழியில்லை. அதனால், முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.