உடுமலை:தபால்துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு வீடு தேடி நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசு, கர்ப்பிணிகளுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, தொடர் பரிசோதனை உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதில், கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு, உதவித்தொகையும், ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த உதவித்தொகைக்காக கர்ப்பிணிகள், அலைச்சலை தவிர்க்க, தபால்துறை சார்பில், சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தபால் துறையினர் கூறியதாவது:தபால்துறையின், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி'யில், சேமிப்பு கணக்கை துவங்கி, கர்ப்பிணிகள் தங்களுக்கான உதவித்தொகையை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளின் விபரங்கள், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படும்.அவர்கள் கர்ப்பிணிகளின் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பெற்று, உடனடியாக சேமிப்புக்கணக்கை துவங்க உதவுவார்கள் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத் திருக்க வேண்டிய தில்லை. பயனாளிகளின் கைரேகை இருந்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும். கர்ப்பிணிகள், வங்கிகளுக்கும், ஏ.டி.எம்., மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இந்த வசதி குறித்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும், இத்திட்டம், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, தபால்துறையினர் கூறினர்.