கோவை:கோவையில், 67 ஆசிரியர்கள் மீதான 17 பி நோட்டீஸ் ரத்து செய்யப்படாததைக் கண்டித்து,வரும் 9ம் தேதி பெருந்திரள் முறையீடு நடத்த, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட கிளையின், பொதுக்குழு கூட்டம் தாமஸ் கிளப்பில் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் தங்கபாசு, பொருளாளர் பாபு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, 2018 நவ., 26ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது, வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட், 2019ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.கோவை மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட, 67 ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் மூலம், 17 பி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 17 பி நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் மனு கொடுத்தும் பயனில்லை.இதைக் கண்டித்து, வரும் 9ம் தேதி பெருந்திரள் முறையீடு நடத்துவதென, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைவர் மணிகண்டன் பேசுகையில், ''தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு 17 பி நோட்டீஸ் வழங்கப்பட்ட, 21 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக பலமுறை வலியுறுத்தியும், கோவை மாவட்டத்தில் எந்த நடவடிக்கையுமில்லை. இதைக் கண்டித்து, வரும் 9ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளோம். தீர்வு இல்லையெனில்,கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் என மண்டல அளவில் பெருமளவு ஆசிரியர்களை திரட்டி, பெருந்திரள் முறையீடு செய்வோம்,'' என்றார்.