விருதுநகர்
மாவட்ட தலைநகரான விருதுநகரிலும் இதே நிலை தான். விருதுநகர் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒண்டிப்புலி குடிநீர் முற்றிலும் வறண்டு விட்டதால் ஆனைக்குட்டத்திலிருந்து அதிகபட்சம் 10 லட்சம் லிட்டர் , தாமிரபரணி குடிநீர் 28 முதல் 30 லட்சம் லிட்டர் வரை சப்ளை ஆகிறது.
நகராட்சி பகுதிகளுக்கு 65 லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் 40 லட்சம் வரை தான் தினசரி குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது. இதனால் குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் சப்ளை ஆகிறது. அதையும் சிலர் மோட்டார் வைத்து திருடுவதால் ஏழை மக்கள் குடிநீருக்கு அல்லாடுகின்றனர். 10 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அகமது நகரிலும், கல்லுாரி ரோட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தற்போது வரை செயல்படுத்தப்படாததால் குடிநீர் விநியோகிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.
இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் செயல்பட துவங்கினால் மண்டலங்கள் குறைக்கப்பட்டு அதிகளவு நீரை தேக்கி 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடியும். இதே போல் ஒன்றிய பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் திட்டம் பல இடங்களில் செயல்பாட்டில் இல்லை. சில ஊராட்சி நிர்வாகங்கள் உப்புநீருடன், தாமிரபரணி குடிநீரை கலந்து விடுகின்றனர். இதனால் குடிநீர் சுவையற்று போகிறது. மேலும் பைப்லைன் உடைசல், பம்பிங் அறையில் வீணாகும் நீர் போன்றவற்றாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார்:
ஸ்ரீவில்லிபுத்துாரில் மூக்கூடலில் இருந்து தாமிரபரணி குடிநீர் கொண்டு வரப்படுகிறது. 2010ல் போடப்பட்ட சிமென்ட் குழாய் அடிக்கடி பழுதாகி பைப்லைன் உடைசல்கள் ஏற்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகிக்க 7 முதல் 12 நாட்களாகிறது. கோடையில் 15 நாட்கள் வரை ஆகிறது. தற்போது பேயனாற்றில் உள்ள கிணறுகள் துார்வாரப்பட்டு செயல்படுத்தப்படுவதால் ஓரளவுக்கு குடிநீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டாலும், நீர் மேலாண்மைக்கு முழுதீர்வு எட்டப்படவில்லை.
வத்தராயிருப்பில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீர் வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை நகராட்சியில் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில் 50 லட்சம் லிட்டர் தான் விநியோகிக்கப்படுகிறது. வைகை தண்ணீர் ஆண்டில் 3 மாதங்கள் மட்டும கிடைக்கிறது. இதனால் பிற மாதங்களில் குடிநீர் விநியோகிப்பதில் பெரும் நெருக்கடி உள்ளது. தாமிரபரணி குடிநீரை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் நகராட்சிகளுக்கு இணைந்து ரூ.444 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ள புதிய திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதையும் முழுமைப்படுத்தினால் மட்டுமே அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் தன்னிறைவு அடையும். இது தவிர அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றிய பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது
சிவகாசி :
சிவகாசி நகராட்சிக்கு 80 லட்சம் லிட்டர் வரை குடிநீர் தேவை உள்ளது. முன்பு வெம்பக்கோட்டை அணையில் இருந்து 50 லட்சம் லிட்டர், மானுார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 30 லட்சம் லிட்டர் என குடிநீர் பெறப்பட்டு தன்னிறைவு செய்தது. தற்போது வெம்பக்கோட்டை அணையில் இருந்து 20 லட்சம் லிட்டர், மானுார் குடிநீர் 10 லட்சம் லிட்டர் என 30 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. இதனால் 7 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தினால் குடிநீர் பற்றாக்குறை குறையும் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
சாத்துார்:
சாத்துார் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் வர வேண்டும். ஆனால் தற்போது 7 முதல் 10 லட்சம் லிட்டர் வரை தான் குடிநீர் சப்ளை ஆகிறது. இதனால் பகுதி வாரியாக 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலும் இதே சிக்கல் உள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் நகராட்சியில் 120 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில், தற்போது 85 லட்சம் லிட்டர் வரை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 6வது மைல் நீர்த்தேக்கம், நகராட்சி கிணறுகள் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. கோடையில் 9 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை நிலவுகிறது. தாமிரபரணி குடிநீர் பணிகள் முடிவடைந்தால் நகராட்சியில் முழு குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சிபகுதி, தளவாய்புரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட ஊரக பகுதிகளிலும் சாஸ்தா கோயில் நீர்தேக்கம் மூலம் தன்னிறைவோடு குடிநீர் பெறுகின்றனர். நீராதாரங்களை ஒட்டியுள்ள கண்மாய்கள் மூலமாகவும் குடிநீர் பெறுகின்றனர்.
கிழக்கு பகுதிகள்
மாவட்டத்தின் கிழக்கு பகுதியான காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் போர்க்குடிநீர் கூட அதிகளவில் உப்பு கரிக்கிறது. இதனால் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறத்தில் வருவதால் சமைப்பதற்கும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இந்நிலை போக்க தான் தாமிரபரணி குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இருப்பினும் பல கிராமங்களில் தாமிரபரணி குடிநீர் இல்லை. கிடைக்கும் நீரையும், உப்பு நீருடன் கலந்து விடுகின்றனர். இதனால் சுவை மாறி அதே உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. கூடுதலாக கூட்டுக்குடிநீர் திட்டம் ஒன்று ஒப்புதலில் உள்ளது. அதை விரைந்து நிறைவேற்றி முழு செயல்பாட்டு வடிவத்திற்கு கொண்டு வந்து அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
காணாமல் போன நீராதாரங்கள்
கவுசிகா நதி, காயல்குடி ஆறு, வைப்பாறு ஆகிய நீராதாரங்கள் காணாமல் போய்விட்டன. இவை கழிவுநீராக மாறி குடிப்பதற்கு உகந்ததல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதே போல பொதுப்பணித்துறை, ஊராட்சி கண்மாய்களும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டன. இதனால் தற்போது வெளியூர் நீராதாரமான தாமிரபரணி குடிநீரையே முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது.