அருப்புக்கோட்டை: நீர்வரத்து ஓடைகளை பராமரிக்காமல் விட்டதால் தொடர் மழை பெய்தும் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகளில் மழை நீரை சேகரிக்க முடியாமல் வீணாகி விட்டன.
போதுமான மழை பொழிவு இல்லாதது, இருந்தாலும் வரத்துகால்வாய்கள் மாயமானதால் பெரும்பாலான நீர்நிலைகள் எப்போதுமே வற்றிய நிலையிலே இருக்கும். மழை காலத்திலும் ஓரளவிற்கு தான் மழை பொழிவு இருக்கும். இருப்பினும் பெய்த மழையை வீணாக்காமல்நீர்நிலைகளில் சேகரிக்க மழை நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளை பராமரிப்புசெய்யாமல் விட்டு விட்டனர்.கடந்த 10 நாட்களாக தொடர் மற்றும் கனமழை மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது. ஆனால் பல ஊர்களில் கண்மாய்கள், ஊரணிகள், தெப்ப குளங்களில் தண்ணீர் இல்லை.மழைநீர் வரத்து வழிகள் அடைபட்டு புதர்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. பல பகுதிகளில் கால்வாய்கள் சிதைந்து விட்டன.
மழை காலம் வருவதற்குள் இவற்றை துார் வாரி சரிசெய்திருக்க வேண்டும்.
ஆனால் இதில் அதிகாரிகளுக்கு எந்த வித அக்கறையும் இல்லை. இதன் காரணமாக பெய்த மழை நீரும் வீணாகி விட்டன.கண்மாய்களை துார் வாரி கணக்கு காட்டுகிறார்களே தவிர அவற்றிற்கு மழை நீர் வந்து செல்லும் கால்வாய்களை சரிசெய்யாமல் விட்டு விடுகின்றனர். கிராம பகுதிகளில் கண்மாய் கரைகளை பலப்படுத்தாமல் விட்டதால் தற்போது பெய்த மழையில் ஒருசில கண்மாய்களில் தண்ணீர் தேங்கியும் கரை பலமில்லாததால் உடைப்பு ஏற்பட்டு தேங்கிய தண்ணீரும் வெளியேறி விட்டது.நீர்நிலைகளுக்கு வரும் மழை நீர் வரத்து கால்வாய்களை துாரி வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
பராமரிப்பு அவசியம்
பெரும்பாலான நீர்நிலைகளுக்கு வரும் மழை நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பின்றி செடிகள் முளைத்தும் சேதமடைந்தும் உள்ளன. கண்மாய்களை மட்டும் துார் வாரினால் போதாது. கால்வாய்களையும் அவ்வவ்போது துார் வாரி முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் மழை நீரை வீணாகாதவாறு சேகரிக்க முடியும். அரசும் இதில் அக்கறை கொள்ள வேண்டும்.
கனகராஜ், சமூக ஆர்வலர்,அருப்புக்கோட்டை.