சாத்துார் : சாத்துார் மேலக்காந்திநகரில் உழுத நிலம் போல் மாறிய ரோடால்ரோட்டை தொலைத்தது போல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
இந்நகரில் 6 மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடைக்காக பிரதான இரு தெரு மற்றும் குறுக்கு தெருக்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டினர். இதற்கான பள்ளம் மற்றும் இணைப்பு குழாய்கள் பதிக்க தோண்டிய பள்ளங்களை முறையாக மூடவில்லை. தோண்டிய இடத்தில் கிராவல் மண் கொண்டு சரிசெய்யாமல் கரிசல் மண்ணை கொண்டே பள்ளங்களை மூடினர். இதனால் நகர் முழுவதும் பள்ளம் மேடாக ரோடு மாறியது.
தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ரோடுக்கள் சகதியாக உள்ளது. இதோடு நகரின் ஒரு பகுதியில் குடிநீர் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மேல காந்தி நகர் ரோடு தோன்டப்பட்டுள்ளது. இதன் பள்ளத்தில் யாரும் தவறி விழக்கூடாது என்பதற்காக பொதுமக்களே களிமண்ணால் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்த மண் மழையின் போது கரைந்து ரோடு முழுவதும் பரவி விடுவதால் உழுத நிலம் போல் ரோடு காட்சியளிக்கிறது.
இதன் மூலம் ரோடு காணாமல்போய்விட்டது போன்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். டூவீலரில் செல்ல முடியாத நிலை உள்ளது. அட்டை கம்பெனி, தீப்பெட்டி தொழிற்சாலை,நிப்பு கம்பெனி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குடியிருப்போர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். பொதுமக்கரோ ரோட்டை காணவில்லை என நகராட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பதாகைகளை ஆங்காங்கே கட்டி தொங்க விட்டுள்ளனர்.இருந்தும் இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை.