விருதுநகர் : விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு வடக்கு தெருவில் கழிவு நீர் செல்ல வழியின்றி தெப்பம் போல் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் வால் புழுக்கள் வீடுகளின் சுவர்களில் ஊர்ந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தெருவை சுற்றிலும் பட்டா நிலங்கள் உள்ளன. ஆரம்பத்தில் கழிவுநீர் பட்டா நிலங்கள் வழியாக சென்று கழிவுநீர் கால்வாயை அடைந்தது. பின் பட்டா நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வடக்கு தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் எடுக்கிறது. இவற்றில் இருந்து வெள்ளை நிறத்தில் உற்பத்தியாகும் வால் புழுக்கள் வீடுகளின் சுவர்களில் ஊர்ந்து செல்வது குடியிருப்போருக்கு அருவருப்பையும், பீதியையும், தொற்று நோய் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
மெட்டுக்குண்டு ஊராட்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் முத்துகுருவம்மாள் கூறியதாவது: வடக்கு தெருவில் தான் நானும் வசிக்கிறேன். ஆறு மாதமாக கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை வந்தால் இடுப்பளவு தண்ணீரில் உயிரை கையில் பிடித்து தான் செல்ல வேண்டும். பெண்கள், முதியோர், சிறுவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். வார்டு உறுப்பினர் என்ற முறையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை போராடியும் பயனில்லை என்றார்.ஊராட்சி தலைவர் சுப்புராஜ் கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.இத்தெருவில் கழிவு நீர் வெளியேற்ற 200 அடிக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் எஞ்சிய பகுதியில் குழாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.