விருதுநகர் : மாவட்டத்தில் சார்பில் ஊரக வேலை உறுதியளிப்பு பணிக்காக ஆயிரக்கணக்கானோர் செல்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு விளை பொருள் உற்பத்தியில் மந்த நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊரக வேலை உறுதியளிப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக 450 ஊராட்சிகளில் தலா 50 முதல் 75 பேர் வீதம் ஆயிரக்கணக்கான பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் கண்மாயை 1 அடிக்கு துார் வாருதல், கரைகளை மேம்படுத்துதல், கிராம சாலைகளின் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.220 சம்பளம் வழங்கப்படுகிறது. சில மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பதாக போக்கு காட்டி விட்டு சில மணி நேரத்தில் வீடு திரும்புவர். இப்பணியில் ஈடுபடுவோர் 99 சதவீதம் பேர் மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வெடுக்க அரசு சார்பில் சம்பளம் வேறு வழங்குவதால் கிராமங்களில் குடுகுடு பாட்டிகள் கூட இப்பணியில் முதல் நபராக சென்று தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொள்கின்றனர்.
இக்காலகட்டத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விளை பொருள் உற்பத்தி பெருமளவு பாதிப்படைகிறது. இதுகுறித்து கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் முகாமில் பலமுறை புகார் கூறியும் பயனில்லை
கோடையில் வேலை தரலாம்
கிராமங்களில் வேலை உறுதியளிப்பு பணிகளை விவசாயம் நடக்கும் போது வழங்கக்கூடாது என்ற அரசு உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை. விளை பொருள் உற்பத்தி நடந்தால் தான் அனைவரும் உணவு உண்ண முடியும். எனவே ஜூன் முதல் மார்ச் வரை வேலை உறுதியளிப்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.- அழகுமலை, விவசாயி, மெட்டுக்குண்டு.