சிவகாசி:சிவகாசியில் அச்சக உரிமையாளர் நந்தகுமார் 48, குடும்பத்தினரை கட்டிப்போட்டு 4௦ பவுன், ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்த தப்பிய முகமூடி கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
சிவகாசி அண்ணாமலையார் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். மனைவி சித்ராதேவி 46, மகன்கள் விஜய் அர்ஜூன் 23, அஜய்கார்த்திக் 16, உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், விஜய் அர்ஜூன் ஒரு அறையிலும், சித்ராதேவி, அஜய்கார்த்திக் ஒரு அறையிலும் துாங்கினர். நள்ளிரவு 1:30 மணிக்கு முகமூடி அணிந்து வந்த நால்வர் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து மெயின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர்.
சித்ராதேவி , அஜய்கார்த்திக் ஆகியோரை கத்தியை காட்டி கை, கால்களை கட்டி வைத்து தாலி செயின், வளையலை பறித்தனர். பின் நந்தகுமாரையும், விஜய் அர்ஜூனையும் கட்டி வைத்து செயின்களை பறித்தனர். மொத்தம் ௪௦ பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரத்தை திருடி தப்பினர். விஜய்அர்ஜூன் கயிறை கழட்டி மற்றவர்களையும் விடுவித்தார். எஸ்.பி., பெருமாள், டி.எஸ்.பி., பிரபாகரன் பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரிக்கிறார்.
எஸ்.பி., கூறுகையில் ''வீட்டில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் செயல்படவில்லை. கேமராக்கள் செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்து பார்க்க வேண்டும். திருடர்களின் கைரேகைகள் கிடைத்துள்ளன. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடிபடுவர், என்றார்.
மற்றொரு திருட்டு: அடுத்த தெருவில் பசை தயாரிக்கும் தொழில் செய்யும் முருகன் 50, குடும்பத்தினருடன் மற்றொரு வீட்டில் துாங்க சென்றார். காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் திருடப்பட்டிருந்தது.