அடையாறு : கல்லுாரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, ஆபாச படங்களை பெற்று, அதன் மூலம் மிரட்டி வந்த இன்ஜினியர் ஒருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவருடன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், அவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிஉள்ளார்.இது குறித்து, மாணவியின் தந்தை அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார், மாணவிக்கு மிரட்டல் அழைப்பு வந்த மொபைல் போன் எண்களை ஆராய்ந்தனர்.இதில், தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண் கிறிஸ்டோபர், 25, என, தெரியவந்தது. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள அவர், மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அவரை பிடித்து, விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியாகின.சம்பந்தப்பட்ட கல்லுாரி மாணவியை, இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு அருண் கிறிஸ்டோபர் பழகியுள்ளார். நாளடைவில், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். போலீசில் புகார்இதனால், சகஜமாக பழகிய மாணவி, அந்த நபரின் வற்புறுத்தலால், வீடியோ கால் மூலம்நிர்வாணமாகவும், புகைப்படங்களையும் அனுப்பிஉள்ளார்.அடுத்த சில நாளில், சுய ரூபத்தை காட்டிய அருண் கிறிஸ்டோபர், அந்த வீடியோ, புகைப்படங்களை வைத்து மிரட்ட ஆரம்பித்து உள்ளார்.
பின், மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, 'ஹேக்' செய்து, அதன் மூலம் அவரின் சக மாணவியருக்கு, அநாகரிகமான புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.இது குறித்து, சக மாணவியர் கேட்டபோது, அருண் கிறிஸ்டோபர், தனது கணக்கை, ஹேக் செய்து பகிர்ந்ததையும் , தன்னை மிரட்டுவதையும் கூறி, மாணவி கதறியுள்ளார்.இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, அம்மாணவியின் பெற்றோருக்கு, அவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னரே, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.போலீசார், அருண் கிறிஸ்டோபர் பயன்படுத்தி வந்த, 'லேப்டாப்', மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.அவற்றை ஆராய்ந்ததில், 'இசி வாலெட்' என்ற 'கிளவுடு' ஆப்பில், பல, 'பைல்'கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. குண்டர் தடுப்பு சட்டம்அதனை, 'சாப்ட்வேர்' மூலம் திறந்து பார்த்தபோது, அதில், பல பெண்களின் நுாற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது கண்டறியப் பட்டது. இதையடுத்து, அருண்கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ''இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.தயக்கம் காட்ட வேண்டாம்!அடையாறு துணைக் கமிஷனர் விக்ரமன் கூறியதாவது:பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை, யாராக இருந்தாலும் பகிர வேண்டாம். இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது தெரிந்தால், 87544 01111 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
இதுபோன்ற விஷயங்களில், யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். இந்த எண்ணில் அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மிகவும் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.