ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே செண்பகதோப்பு பேயனாற்றில் குளிக்க சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்துார் பேயனாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கோட்டைபட்டி கிராமத்தை சேர்ந்தசசிக்குமார்,பால்பாண்டி 21, கோபிசங்கர் 21, முத்துஈஸ்வரன் 25, சத்யபிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் செண்பகதோப்பு பேயனாற்றில் குளிக்க சென்றனர்.முதலில் ஆற்றில் இறங்கிய பால்பாண்டி தண்ணீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்தார்.
கோபிசங்கர், முத்துஈஸ்வரன், சத்யபிரகாஷ் தண்ணீருக்குள் குதித்து காப்பாற்ற முயன்றனர். அப்போது பால்பாண்டி, கோபிசங்கர், முத்துஈஸ்வரன் ஆகியோரை தண்ணீர் அடித்து செல்லவே டவலை பயன்படுத்தி சத்யபிரகாசை, சசிக்குமார் மீட்டார். மாயமான மூவரையும் மம்சாபுரம் போலீசார், ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறையினர் தேடியநிலையில் நேற்று காலை 7:00 மணிக்கு பால்பாண்டி, முத்துஈஸ்வரன் உடல்களும், காலை 11:00 மணிக்கு கோபிசங்கர் உடலும் மீட்கப்பட்டது. இதில் முத்துஈஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.