சாத்துார்: தூர்ந்து போன சாக்கடை, தெருவின் நடுவில் முள்செடிகள் ,விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் சாத்துார் படந்தால் சண்முகசுந்தரம் நாடார் தெரு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இத் தெருவிற்கு செல்லும் பாதையில் முள் செடி அடர்த்தியாக வளர்த்து பாதை மறித்து காணப்படுகிறது. இங்குள்ள குப்பைத்தொட்டி சேதமடைந்து கொட்டப்படும் குப்பை சிதறுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புதிய குப்பை வண்டி ஊராட்சிக்கு வந்தும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. தெருவில் வாரம் ஒருமுறை குப்பை அகற்றிய நிலையில் சில மாதங்களாக இப்பணி நடைபெறவில்லை. சாக்கடை துார்ந்து போன நிலையில் கழிவு நீரானது பாதையில் தேங்குகிறது. வீடுகளுக்கு துாய்மை பணியாளர்கள் வந்து குப்பை வாங்கி செல்லவும் ரோட்டை மறித்து வளர்ந்து இருக்கும் முள்செடியை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.