விருதுநகர்: விருதுநகர் குல்லுார்சந்தை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் நீர் மட்டம் 16 அடியாக (மொத்தம் 20 அடி) உயர்ந்தது.
2891 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 2700 டன் வேளாண் விளை பொருள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புறநகரை சுற்றிலும் பெய்யும் கன மழையால் உற்பத்தியாகும் காட்டாற்று வெள்ளம் கவுசிகா நதி வழியாக குல்லுார்சந்தை அணையை நிரப்புகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைக்கு நீர் வரத்து இல்லை. தற்போது வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால் குல்லுார்சந்தை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.இதன் நீர்மட்டம் 16 அடியாக ( 20 அடி) உயர்ந்துள்ளது.
3500 மீட்டர் நீளம் கொண்ட வலது பிரதான கால்வாய், 6500 மீட்டர் நீளம் கொண்ட இடது பிரதான கால்வாய் வழியாக பாசன வசதிக்காக அணை நீர் திறந்து விட பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) திட்டமிட்டுள்ளது. இதனால் குல்லுார்சந்தை, சூலக்கரை, மெட்டுக்குண்டு, சென்நெல்குடி, செட்டிபட்டி, மருளுத்து உள்ளிட்ட பகுதிகளில் 2891 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.இதன் மூலம் விருதுநகர், அருப்புக்கோட்டை வட்டத்தில் 2700 டன் விளை பொருட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை மூலம் மீன் குஞ்சு வளர்த்து மீன் பிடிக்க மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.