ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இக்கோயில் ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு மதுரை மாவட்ட பக்தர்கள் வாழைத்தோப்பு சந்தையூர் மலைப்பாதை வழியாகவும், விருதுநகர் மாவட்ட பக்தர்கள் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பாதை வழியாகவும், தேனி மாவட்ட பக்தர்கள் வருசநாடு மலைப்பாதை வழியாகவும் செல்கின்றனர். இதில் தாணிப்பாறை - சதுரகிரி கோயில் வரை 8 கி.மீ., தொலைவு கொண்ட மலைப்பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது. பிற மாவட்ட பக்தர்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காட்டாற்றில் 9 பேர் பலி : பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையேறுகின்றனர். மழைக்காலங்களில் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பு உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும். 2015 அக்டோபர் 8ல் கோயிலில் தரிசனம் முடிந்து மலைப்பாதை வழியாக கீழே இறங்கி வந்தபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் பலியாகினர்.
இத்துயர சம்பவத்துக்கு பின் பவுர்ணமி, அமாவாசை பூஜைக்கு மூன்று நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.குடிநீருக்கு தட்டுப்பாடு வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் குழுவாக செல்வது வழக்கம். தனியாக செல்லும் சிலரை சிறுத்தை, கரடி தாக்கிய சம்பவங்களும் நடந்து வருகிறது. மலைப்பாதையில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆடி அமாவாசைக்கு மட்டும் அறநிலைத்துறை சார்பில் சில வசதிகள் செய்து தரப்படுகிறது.
மற்ற நாட்களில் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை எட்டாக் கனியாகவே உள்ளது. இக்கோயில் மலைப்பாதையை சீரமைக்கவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.