விருதுநகர் : நாட்டு கருவேல மரம் உயர்ந்து வளரும். வைரம் பாய்ந்த மரக்கட்டைகள் உளுத்து போவதில்லை; மாறாக உறுதித்தன்மையுடன் பல ஆண்டுகள் உழைக்கிறது.
இவற்றில் இருந்து ஏர் கலப்பை, அரிவாள், கோடாரி, மண்வெட்டிக்கு தேவையான காம்புகள், கைப்பிடிகள் செய்யவும், மாட்டு வண்டிகள், வீட்டிற்கு தேவையான நிலைக்கதவு, ஜன்னல் பலகை, மரச்சட்டங்கள் செய்ய ஏற்றது. காகித உற்பத்திக்கும் நாட்டு கருவேல மரங்கள் பெரிதும் உதவுகிறது. இலைகள், இனிப்புச்சுவை கொண்ட நெற்றுகளை வெள்ளாடுகள் விரும்பி உண்ணும்.உலர்ந்த நெற்றுகளை ஆட்டினால் அவற்றில் இருந்து விதைகள் 'கலகல' என ஒலிக்கும்.
சிறுவர்கள் இதன் நெற்றுகளை கால்களில் சலங்கை போல் கட்டி கொண்டு 'ஜல்ஜல்' ஓசை எழுப்பியபடி நடந்து சென்று மகிழ்வர்.இம்மரத்தில் இருந்து ஒழுகும் பிசின் (கோந்து) எழுது தாள்களை நன்கு ஒட்ட உதவுகிறது. கருவேல காய்களை கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து கொட்டாங்குச்சிகளில் ஊற வைப்பர். ஊறிய நீரை வெயிலில் காய வைப்பர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றி குழைத்து நெற்றி பொட்டாக பயன்படுத்துவர். அந்த பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தை பார்க்கலாம்.'ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி' என்ற பழமொழி உண்டு.
இதை மெய்ப்பிக்கும் வகையில் கருவேலம்பட்டை பற்பொடி உதவுகிறது. இதன் துவர்ப்பு சுவை பல், ஈறு நோய்களை விரட்டும் அற்புத மூலிகை. காற்றின் ஈரப்பதத்தையும் விட்டு வைக்காமல் உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இவற்றில் பறவைகள் கூடு கட்டாது. நாட்டு கருவேல மரங்களை தேடி பறவைகள் வரும். இவற்றின் நன்மைகள் அறிந்து விருதுநகரில் பெரும்பாலானோர் நாட்டு கருவேல மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் மேன்மையடையவும், தொழில் ரீதியாக லாபம் ஈட்டியும் வருகின்றனர்.