விழுப்புரம் - வளவனுார் மீன் வியாபாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புரட்சி பாரதம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலகர்பாபு தலைமையில் பெண்கள் கொடுத்துள்ள மனு;வளவனுார் பேரூராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் இடத்தை, பேரூராட்சி நிர்வாகம் தனியார் ஆங்கிலப்பள்ளிக்கு தாரை வார்த்துவிட்டனர். இதனால், அங்கு மீன் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை சாலையோரம் மீன் விற்பனை செய்யக்கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மிரட்டி வருகின்றனர்.கடந்த 22ம் தேதி தரணி வேலு என்ற பெண் மீன் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மீன் கடையின் முன் குப்பைகளை கொட்டியுள்ளனர். இது மீன் வியாபாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, குப்பைகள் கொட்டிய நபர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார், பெண் மீன் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.