திருவொற்றியூர்; புயல் சின்னம் எதிரொலியால், காசிமேடு, எண்ணுார், திருவொற்றியூரில், 2,000 படகுகளை பத்திரப்படுத்தும் பணியில், மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, 25ம் தேதி கரையை கடக்க கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புயல் சின்னம் காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின், வார்ப்பு பகுதிகளில், 850 விசைப்படகுகள், நாட்டு படகுகள், பைபர் படகுகள் பத்திரமாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.தவிர, காசிமேடைச் சேர்ந்த, 150 விசைபடகுகள், மீன்பிடிக்க சென்று, ஆந்திர கடல் பகுதியில் உள்ளனர். அவர்களை, மசூலிப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா பட்டினம் துறைமுகங்களில், கரை ஒதுங்க, மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், என்.டி.ஓ., குப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே., குப்பம், பாரதியார் நகர், நேதாஜி நகர், இந்திரா காந்தி குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம்.எர்ணாவூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம், முகத்துவாரகுப்பம், எண்ணுார் குப்பம், சிவன்படைவீதி குப்பம், காட்டுகுப்பம் உட்பட, 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள், பத்திரப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, பைபர் படகுகளை, பாறைகளில் ஏற்றி, ராட்சத கயிறுகளால் கட்டி வைக்கும் பணியில், மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மீன்பிடி வலைகளையும் பத்திரமான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.புயல் சின்னம் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றவர்களை கரை ஒதுங்கவும், வெகு தொலைவில் உள்ளவர்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மீனவ கிராமங்கள் தோறும், ஒலிப்பெருக்கி, கடிதம் மூலம், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.