மேடவாக்கம்; மேடவாக்கத்தில், சாலைகளில் ஆறாக வழிந்தோடும் கழிவு நீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேடவாக்கத்தில் அமைந்துள்ள, சிவகாமி நகர், நல்லதம்பி நகரில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் இல்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் வடிகாலில் விடப்படுகிறது.கடந்த பல மாதங்களாக, வடிகால் அடைப்பு காரணமாக, பிரதான சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது.பரவலாக மழை பெய்யும் போது, மழை நீருடன் கழிவு நீர் கலந்து, சிவகாமிநகர், நல்லதம்பி நகர் பிரதான சாலையில் வழிந்தோடி, அப்பகுதியில் உள்ள காலிமனைகளில் தேங்குகிறது.இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுத்துகிறது.இது குறித்து, சிவகாமி நகர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:சிவகாமி நகர், நல்லதம்பி நகரில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீர், மழை நீருடன் கலந்து தேங்கி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியோர் வரை, மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும், எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பை, கழிவு நீர் அகற்றப்பட வேண்டும். மேலும், நகரில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.