சென்னை - கலெக்டர் அலுவலகத்தில், பொறுப்பு அதிகாரிகள் இல்லாததால், மனு அளிக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டம், ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, புகார் பெட்டியில் போடும் முறை பின்பற்றப்பட்டது.இதற்காக, பொறுப்பு அதிகாரிகள் இல்லாததால், தகவல் கேட்க முடியாமல், எட்டு தளங்களிலும் மக்கள் மனுவை வைத்து, அலைந்து வருகின்றனர்.வழக்கமாக, நடக்கும் முகாம்களில், தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி வழி கண்காணிப்பு மையத்தில், மனுவிற்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.ஆனால், தற்போது, பெட்டியில் போடப்படும் மனுவிற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால், நேற்று மனு அளிக்க வந்த சிலர், பெட்டியில் போடாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.நேற்று, கலெக்டர் அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர். ஆனால், பெட்டியில், 10 மனுக்கள் கூட பெறப்படவில்லை.எனவே, அலுவலக நுழைவாயிலில், பொதுமக்களின் குறைகளை கேட்க, அதிகாரி ஒருவரை அமர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.