-அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதில், செம்பாக்கம் நகர பிரதிநிதிகள் இடையே, மாவட்ட செயலர் வீட்டில் பிரச்னை ஏற்பட்டு, குழாயடி சண்டை போல், வாக்குவாதம் நடந்தது.சென்னை, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகர அ.தி.மு.க.,வில், 10 ஆண்டுகளுக்கும் மேல், கட்சியினரிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது.இந்நிலையில், அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செம்பாக்கம் நகராட்சியில், நகரச் செயலர் விஜயராகவன் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்தார்.செம்பாக்கம் நகராட்சியின் முன்னாள் தலைவர் சாந்தகுமாரும், தன் பங்கிற்கு, பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்தார். இது, இரு தரப்பினருக்கும் இடையே, சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம், சில தினங்களுக்கு முன், மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் சென்றபோது, இருதரப்பிற்கும் இடையே, பகிரங்க மோதல் வெடித்தது.குழாயடி சண்டை போல் நடந்த வாக்குவாதத்தில், 'விஜயராகவனை மாற்றுங்கள்' என, சாந்தகுமாரும், 'சாந்தகுமாரை அடக்கி வையுங்கள்' என, விஜயராகவனும், மாறி மாறி கூறியதால், மாவட்ட செயலர் ராஜேந்திரன், செய்வதறியாது திகைத்து நின்றார்.அரை மணிநேரத்திற்கு மேல், வாக்குவாதம் நீடித்த நிலையில், தலைமையிடம் பேசி, முடிவெடுப்பதாக கூறி, இரு தரப்பையும் சமாதானம் செய்து, அவர் அனுப்பி வைத்தார்
- நமது நிருபர்-
.