மாமூல் கேட்ட பா.ம.க., நிர்வாகிகள் கைது
வாடிப்பட்டி: பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் 29. இவர் கல் குவாரி லாரிகளை ஆயுதங்களுடன் மறித்து டிரைவர்களிடம் மாமூல் கேட்டதாக கைது செய்யப்பட்டார். பா.ம.க., மாவட்ட துணை செயலாளர் சீனி, நிர்வாகிகள் கார்த்தி, சசியையும் போலீசார் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
அலங்காநல்லுார்: எஸ்.ஐ., இளங்கோவன் மற்றும் போலீசார் நடுபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்ற தாதகவுண்டன்பட்டி ரமேஷை 35, கைது செய்து 76 மது பாட்டில்கள் மற்றும் ரூ.800ஐ பறிமுதல் செய்தனர்.
கார் கவிழ்ந்து ஒருவர் பலி
கள்ளிக்குடி: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சின்னதம்பி 35, குடும்பத்தினருடன் காரில்கோவை சென்று திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் கள்ளிக்குடி அருகே நான்குவழிச்சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சின்னதம்பி பலியானார். உடன் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தக்காளி வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
திருமங்கலம்: கோவையில் இருந்து தென்காசிக்கு தக்காளி லோடு ஏற்றிச் சென்ற மினி வேன் கப்பலுார் பாலத்தில் சென்றது. ரிங்ரோட்டில் இருந்து கப்பலுார் பாலத்தில் திரும்பிய மதுரை குசவன்குண்டு நாராயணன் மகன் பூவலிங்கம் 33, (ஹெல்மெட் அணிந்திருந்தார்) வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் அடித்தார். கட்டுப்பாட்டை இழந்த வேன் பூவலிங்கம் வந்த டூவீலர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் அவர் பலியானார். வேன் டிரைவர் தென்காசி ஆலங்குளம் ராஜனிடம் எஸ்.ஐ., சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மஞ்சுவிரட்டு; 3 பேர் மீது வழக்கு
கொட்டாம்பட்டி: கோட்டப்பட்டி பகுதியில் கொட்டாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மஞ்சுவிரட்டு நடந்த முயற்சித்த கச்சிராயன்பட்டி ராதாகிருஷ்ணன், மேலுார் பிரதீப், மணப்பட்டி பசும்பொன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.