மதுரை : ''அரசின் 'அம்மா' டூ வீலர் திட்டத்தில் பயன்பெற தகுதியான பணிக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: நகர், புறநகர் பகுதியில் தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படை, சத்துணவு, அங்கன்வாடி பெண் பணியாளர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். வாகன விலை மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
பயனாளிகள் தமிழகத்தில் வசிப்பவராக, 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக, டூவீலர் ஓட்டுனர் உரிமம், பழகுநர் உரிமம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி தகுதி தேவையில்லை. குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெறலாம்.
விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் பெறலாம்.மேலும் விவரங்களையும் அந்த அலுவலகங்களில் பெறலாம். இணையத்திலும் பதிவிறக்கம் செய்யலாம், என கூறியுள்ளார்.